search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா அரசு"

    • 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
    • மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அரசு மற்றும் அரசு சாராவளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகிறது.

    இதனால் 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

    சராசரியாக ஒரு எக்டேர் பரப்பில் 104 மரங்கள் வெட்டப்பட்டது. இந்த மரங்களை வெட்ட அனுமதி அளித்ததன் மூலம் வனத்துறையானது ரூ.2,058 கோடி வருவாய் ஈட்டியது. இந்த வருவாய் மாநிலத்தின் தற்காலிக இழப்பீடு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதி காடு வளர்ப்பு மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மாநில வனத்துறை 5 ஆண்டுகளுக்குள் 12 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வெட்ட அனுமதித்துள்ளது.

    இதன் மூலம் மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    • நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான ஹரிஸ்ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • பயிர் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது.

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இதற்கான இறுதிகட்ட பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. இதற்கிடையே ராபி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மாநில அரசின் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்து இருந்தது.

    அதன்படி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இன்று நிதி உதவி வரவு வைக்கப்படும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்து இருந்தார். நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ.வும், வேட்பாளருமான ஹரிஸ்ராவ் விளம்பரப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத்தொடர்ந்து பயிர் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு அளித்த அனுமதியை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றது. விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்க தேர்தல் முடியும் வரை தற்காலிக தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடனே தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்ப டுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வருகிற அக்டோபர் 24-ந் தேதி முதல் தெலுங்கானா மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது.

    இந்த திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    • தெலுங்கானா மாநில அரசு அதிகாரிகள் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில்சென்னை வந்தனர்.
    • இத்திட்டத்தை வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்படுத்த அரசாணை வெளியீடு.

    தமிழகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைகிறார்கள். பள்ளிக்கு காலை உணவு சாப்பிடாமல் மாணவர்கள் வருவதால் கல்வி கற்பதில் ஏற்படும் சிரமங்கள், பள்ளி இடைநிற்றலை தவிர்த்தல் போன்ற காரணத்திற்காக இத்திட்டம் செயல்படுத்துவதால் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.

    பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அது போலவே இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக தெலுங்கானா மாநில அரசு அதிகாரிகள் கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில்சென்னை வந்தனர்.

    அவர்கள் வட சென்னை பகுதியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை பார்வையிட்டனர். சென்னை வந்த தெலுங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், அரசு பழங்குடியினர் நலத்துறை, செயலாளர் டாக்டர்.கிறிஸ்டினா சொங்து, கல்வித்துறை செயலாளர் கருணா வக்காட்டி, முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலர் பிரியங்கா வர்கீஸ், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் துறை அரசு சிறப்புச் செயலாளர் பாரதி ஹொல்லிக்கேரி, உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் ராயபுரத்தில் உணவு தயாரிக்கும் கூடம் மற்றும் மாநகராட்சி உருது தொடக்க பள்ளியில் திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

    அவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

    இந்நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தெலுங்கானா அரசு அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

    அதன்படி, 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டத்தை வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    • கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர ‘நோ பேக் டே’ திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    குழந்தைகள் 5 வயது பூர்த்தியான பின்னர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்படியே பள்ளிக்கு அழைத்துச் சென்றாலும் அங்குள்ள ஆசிரியர் குழந்தைகளை தலையை சுற்றி காதை தொடுமாறு கூறுவார். அப்படி காதை தொட்ட குழந்தைகள் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. 2½ வயது ஆகிவிட்டாலே மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு புத்தகம் பை வீட்டு பாடம் என ஆரம்பத்திலேயே சுமைகள் அதிகரிக்கிறது.

    கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுதொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து டாக்டர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

    பள்ளி மாணவர்களின் முதுகு எலும்பை பாதுகாப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வளைதல் ஆகிய உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன.

    தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள் பையை தவறான முறையில் தொடர்ந்து பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் இளம் வயதிலேயே முதுகு கூன் விழுதல், சுவாச கோளாறு, முதுகு தண்டுவட சவ்வு விலகுதல் போன்ற பிரச்சனைகள் வரும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளனர்.

    பள்ளிக் குழந்தைகளின் புத்தக பை சுமையை குறைக்க தெலுங்கானா மாநில அரசு இந்த கல்வியாண்டில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.

    தெலுங்கானாவில் மாணவர்களின் சுமையை குறைக்க வாரத்தில் ஒரு நாள் 'நோ பேக் டே' புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர 'நோ பேக் டே' திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமையன்று இந்த 'நோ பேக் டே' கடைபிடிக்கப்படும்.

    அந்த நாட்களில் புத்தக பை கொண்டு செல்ல வேண்டாம்.

    ஆண்டு முழுவதும் மொத்தம் 10 பேக் இல்லாத நாட்கள் கடைபிடிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்கள் புத்தக பையை சிரமத்தோடு சுமந்து வருவது தடுக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநில கல்வி காலண்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 12, 2023 முதல் ஏப்ரல் 23, 2024 வரையிலான கல்வியாண்டில் 'நோ பேக் டே' நாளாக அறிவித்த தேதிகளை கோடிட்டு காட்டியுள்ளது.

    இந்த 'நோ பேக் டே' நாளில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி, யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடைபெறும்.

    இதுகுறித்து அந்த மாநில கல்விச் செயலாளர் கூறியதாவது:-

    இந்த 'நோ பேக் டே' நாளில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை தவிர மற்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

    இந்த 'நோ பேக் டே' நாள் கடைபிடிக்கப்படுவதால் யோகா, விளையாட்டு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.

    இதன்மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மற்றும் பொது அறிவு வளரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மசோதாக்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தொடங்கி நிலுவையில் இருந்து வருகின்றன.
    • நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தெலுங்கானா தலைமைச்செயலாளர் ஏ.சாந்திகுமார் சார்பில் வக்கீல் உதய்குமார் சாகர் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அசாமாபாத் தொழிற்சாலை பகுதி திருத்த மசோதா, நகராட்சி திருத்த மசோதா, அரசு வேலைவாய்ப்பு திருத்த மசோதா, வன பல்கலைக்கழக மசோதா, பல்கலைக்கழகங்கள் வேலை நியமன வாரிய மசோதா, மோட்டார் வாகன வரி மசோதா உள்பட 10 மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

    இந்த மசோதாக்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தொடங்கி நிலுவையில் இருந்து வருகின்றன. ஆனால் இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறி கவர்னர் நடந்து கொள்வது வழக்கத்துக்கு மாறான, சட்டவிரோதமான, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும்.

    நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

    • சட்டசபையில் கவர்னர் உரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • குடியரசு தினத்தன்று கொடியேற்ற அனுமதிக்கப்படவில்லை.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று நேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்தன.

    இதையொட்டி, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தெலுங்கானா மாநில அரசு மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நான் பதவி ஏற்றபோது, இந்த மாநிலத்துக்காக என்னை அர்ப்பணித்துக் கொள்வது என்று உறுதி பூண்டேன். ஆனால் அதை சாத்தியமாக்க நான் எந்த முயற்சி எடுத்தாலும், அது எளிதான காரியமாக இல்லை.

    மாநிலத்தின் உயர்ந்த பதவிக்கு கூட நிறைய முட்டுக்கட்டைகள் போடப்படுகிறது. உதாரணமாக, 'சம்மக்கா-சரக்கா ஜதாரா' என்ற பழங்குடியின திருவிழாவுக்கு செல்ல எனது அலுவலகம் ஹெலிகாப்டர் கேட்டது.

    ஆனால், ஹெலிகாப்டர் தரப்படுமா, இல்லையா என்பது பற்றி மாநில அரசு எதுவுமே கூறவில்லை. பின்னர், 8 மணி நேரம் நான் சாலைமார்க்கமாக செல்ல வேண்டி இருந்தது. நான் மக்களை சந்திக்க விரும்பும்போதெல்லாம் நிறைய முட்டுக்கட்டைகளை சந்தித்தேன். ஒவ்வொரு மாநிலமும் தனது வரலாறை எழுதும். பெண் கவர்னர் என்பதால் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவர் எப்படி பாகுபாட்டுடன் நடத்தப்பட்டார் என்பதை இந்த மாநிலம் வரலாறாக எழுதும்.

    கவர்னர் மோசமாக நடத்தப்பட்டார் என்று எதிர்மறையாக வரலாறு எழுதப்படுவதை நான் விரும்பவில்லை பெண் என்பதற்காக மட்டும் எனது உரிமைகளை கோர விரும்பவில்லை.

    சட்டசபையில் கவர்னர் உரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குடியரசு தினத்தன்று கொடியேற்ற அனுமதிக்கப்படவில்லை. எனது அரசுமுறை பயணங்களின்போது மரபுகள் பின்பற்றப்படவில்லை.

    கவர்னர் பதவி அவமதிக்கப்படுகிறது. உதாரணமாக, கவர்னர் மாளிகையில் நான் விருந்து அளித்தபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்ந்த பதவியில் இருப்பவர் வரமாட்டார் என்ற தகவலை என்னிடம் தெரிவித்து இருக்க வேண்டும்.

    முதலில், வருவதாக சொன்னார்கள். பிறகு தகவலே இல்லை. உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு மருத்துவமனை டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
    • அரசின் இந்த உத்தரவுக்கு தெலுங்கானா ஜூனியர் டாக்டர் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ஐதராபாத்:

    பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்ந்த டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

    தெலுங்கானா மருத்துவக் கல்விச் சேவைகள் விதிகளில் திருத்தங்களைச் செய்து, டாக்டர்களின் கிளினிக் பயிற்சிக்கு முழு தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.

    ×